இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று டில்லியில் தொடங்குகிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், பொருளாதார சக்தி மிக்க ஐரோப்பிய ஒன்றியமும் நெருக்கமான உறவை கொண்டுள்ளன. இருதரப்புகளுக்கிடையே நடைபெற்று வரும் FTA பேச்சுவார்த்தை, கடந்த 17 ஆண்டுகளாக இழுபறியாக இருந்தது. சில முக்கிய பிரச்சினைகளில் ஒருமித்த முடிவு எட்ட முடியாததால், 2013ஆம் ஆண்டு இந்த பேச்சு நிறுத்தப்பட்டது. பின்னர் 2022 ஜூன் மாதத்தில் மீண்டும் துவங்கியது.
ஒப்பந்தத்தை விரைந்து நிறைவு செய்ய இருதரப்பும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.
இன்று தொடங்கும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில், வரி சாரா தடைகள், சந்தை அணுகல் மற்றும் அரசு கொள்முதல் போன்ற அடிப்படை சிக்கல்களை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தை முடிப்பதே இலக்காக இருதரப்பும் செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்கா இந்தியாவின் ஏற்றுமதிகளில் விதித்துள்ள கூடுதல் வரி நிலைமைக்கு மத்தியில், இந்த FTA ஒப்பந்தம் இந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.