இந்திய விமானப்படையில் ஆறுக்கும் மேற்பட்ட தசாப்தங்களாக சேவையாற்றிய மிக்-21 போர் விமானங்கள் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகின்றன.
1963ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட இவ்விமானங்கள், 1965 மற்றும் 1971 இந்தியா–பாகிஸ்தான் போர்கள், 1999 கார்கில் போர் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான ராணுவ நடவடிக்கைகளில் பங்காற்றின. சமீபத்திய பாலகோட் தாக்குதல் (2019) மற்றும் “ஆபரேஷன் சிந்தூர்” உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் மிக்-21 விமானங்கள் பங்கேற்றன.
ஆனாலும், கடந்த காலங்களில் இவை 400-க்கும் மேற்பட்ட விபத்துகளை சந்தித்துள்ளன. பல்வேறு பைலட்டுகள் உயிரிழந்த சம்பவங்களால், மிக்-21 விமானங்களுக்கு “ஃப்ளையிங் காஃபின்” (Flying Coffin) என்ற பெயரும் வழங்கப்பட்டது.
உலகளவில் மிக்-21 விமானங்களை அதிக அளவில் பயன்படுத்திய நாடாக இந்தியா விளங்குகிறது. காலப்போக்கில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டாலும், தற்போதைய பாதுகாப்பு தேவைகளை கருத்தில் கொண்டு, இவை ஓய்வு பெறுகின்றன.
சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மூன்று படைத்தளபதிகள் கலந்து கொண்டு மிக்-21 களை பிரியாவிடை செய்ய உள்ளனர். இவற்றுக்கு பதிலாக, நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லைட் காம்பாட் ஏர்கிராப்ட் “தேஜஸ்” அடுத்த தலைமுறை போர் விமானமாக பணியில் இணைய உள்ளது.