இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : 50 நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வு !

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தொடரின் தொடக்கத்திற்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், ரசிகர்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது, இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பையில் பங்கேற்கிறது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 19 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தொடங்கும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி, கடைசி போட்டி அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதன் பின்னர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும்.

இந்தத் தொடரில் இந்தியாவின் சீனியர் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கவுள்ளனர். மேலும், சமீபத்தில் ஆசியக் கோப்பையில் விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயர், இத்தொடரில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

“இந்தியா–ஆஸ்திரேலியா மோதல் எப்போதும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமானது. இத்தொடரும் அதற்கு விதிவிலக்கல்ல. அரங்குகள் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிரும்” என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலக கிரிக்கெட்டின் முன்னணி அணிகளாக இருப்பதால், வரும் தொடர்கள் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version