IND vs SA ODI : 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோலியின் அதிரடி !

ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய ரசிகர்கள் காத்திருந்த தருணம் பிரம்மாண்டமாக எழுந்தது. க்ரீஸில் கால் வைத்த விராட் கோலி, தனது ரன் கணக்கை நேரடியாக ஒரு ஸ்டைலிஷ் சிக்ஸருடன் தொடங்கி மைதானம் முழுவதையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி தனது ரன் கணக்கை சிக்ஸரால் தொடங்குவது இது வரலாற்றில் இரண்டாவது முறை என்பது சிறப்பு.

முதல் ரன்னே சிக்ஸர்!
லுங்கி இங்கிடியின் 6வது ஓவரின் கடைசி பந்தில் வரை கோலி ரன் எடுக்காமல் பொறுமையாக விளையாடினார். அந்த பந்து ஒரு குறுகிய நீளப் பந்தாக வந்ததை கண நேரத்தில் கணித்த கோலி, முன்னங்காலை தூக்கி அழகான ‘புல் ஷாட்’-ஐ ஆடி, பந்தை பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் நேரடியாக சிக்ஸருக்குப் பறக்க விட்டார். வழக்கமாக சமநிலையுடன் தொடங்கும் கோலி, இம்முறை முதல் ரன்னையே சிக்ஸராக மாற்றியது ரசிகர்களை உற்சாகத்தால் நிரப்பியது.

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் சாதனை !
கோலி தனது ஒருநாள் ரன் கணக்கை சிக்ஸரால் தொடங்கியது முதலில் 2013ல் கிங்ஸ்டனில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் போட்டியில்தான். அதே காட்சியை 12 ஆண்டுகள் கழித்து ராய்ப்பூரில் தென்னாப்பிரிக்கா எதிராக ரசிகர்கள் மீண்டும் ரசித்தனர்.

இந்தியாவின் தொடக்கம் – ஏற்றத் தாழ்வுகள்
ஆட்டத்தின் ஆரம்பத்தில் ரோஹித் சர்மா நான்ட்ரே பர்கர் வீசிய ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிகள் அடித்து தாக்குதலில் ஈடுபட்டார். ஆனால் அதே ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் வெளியேறினார். ஜெய்ஸ்வாலும் நீண்ட நேரம் நிலைக்காமல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து இன்னிங்ஸை உறுதியான பாதையில் முன்னேற்றி வந்தனர்.

Exit mobile version