இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்பட்ட ட்யூக் பந்துகளின் தரம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த பந்துகளை தயாரிக்கும் நிறுவனம் அவற்றை ஆய்வு செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இந்த தொடரில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பந்துகள் விரைவில் பழுதடைந்து வடிவம் குலைந்துவிட்டதாக வீரர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். பல போட்டிகளில் 30 ஓவர்களுக்குள் பந்துகளை மாற்ற வேண்டிய நிலை உருவானது. இதனால், பந்துகளின் தரம் குறித்து கேள்விகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பந்துகளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழியாக திரட்டும் பணியை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, பந்துகளின் உள்படிவம், செயல்திறன் மற்றும் நீடித்தன்மை ஆகியவை தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்படும் என ட்யூக் பந்துகளை தயாரிக்கும் British Cricket Balls Ltd. நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைபாடுகள் உறுதிப்படுத்தப்பட்டால், அவற்றை சரிசெய்யும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அதிகரித்த பேட்டிங் ஸ்கோர், பந்தின் குலைவு, சுவிங் குறைவு ஆகியவை குறித்து முந்தைய நாட்களாகவே முன்னணி வீரர்கள் எச்சரிக்கை விடுத்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் எந்த வகை பந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தீர்மானிக்கின்றன. இங்கிலாந்தில் ட்யூக், இந்தியாவில் எஸ்.ஜி., ஆஸ்திரேலியாவில் குக்கபுரா பந்துகள் டெஸ்ட் போட்டிகளில் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.