சென்னை :
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் காய்ச்சல் நோயாளிகள் கணிசமாக அதிகரித்துள்ளனர். காலநிலை மாற்றம், மழை தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த வைரஸ் பரவல் வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காய்ச்சல், சளி, இருமல், தலைவலி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடமிருந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்காக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், முதியவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் திருமணம், விழா போன்ற மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி மருத்துவமனையை நாட வேண்டும் என்றும் பொதுச் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.