விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள 6 லட்சத்து 4 ஆயிரத்து 39 குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் சிறப்புப் பரிசுத் தொகுப்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று பல்வேறு இடங்களில் நேரில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலவநத்தம் மற்றும் நகராட்சிக்குட்பட்ட வெள்ளக்கோட்டை பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பயனாளிகளுக்குப் பரிசுத் தொகுப்புகளை வழங்கி உரையாற்றினார். அப்போது, மாநிலத்தின் நிதிச் சுமையைக் கருதாமல், சாமானிய மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள், வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அவை முறைப்படி பரிசீலிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
தொடர்ந்து, சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலம், காரியாபட்டி மற்றும் விருதுநகர் புல்லலக்கோட்டை சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். சிவகாசியில் பேசிய அவர், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டினார். சிவகாசி தொகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரயில்வே மேம்பாலம், நான்கு வழிச்சாலை மற்றும் வெளிவட்டச் சாலை போன்ற உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் அசோகன், சீனிவாசன், மேயர் சங்கீதா இன்பம் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றனர். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய இந்தத் தொகுப்பைப் பெற்றுக்கொண்ட பொதுமக்கள், பண்டிகைக் காலங்களில் இது தங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனத் தங்களது நெகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
