வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகக் கடும் குளிர் நிலவுவதுடன், பல இடங்களில் மூடுபனி போர்த்தியிருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால், வால்பாறையில் குளிர் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கவர்க்கல் மலைப்பாதையில் நிலவிய கடும் மூடுபனி காரணமாகச் சாலைகள் முற்றிலும் மறைக்கப்பட்டன. பகல் நேரத்திலும் சூரிய வெளிச்சம் இன்றி குளிரான காலநிலையே நிலவி வருகிறது. கவர்க்கல் பகுதியில் நிலவிய அடர் மூடுபனியால் எதிரே வரும் வாகனங்கள் கூடத் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் தங்களது முகப்பு விளக்குகளை (Headlights) எரியவிட்டபடி மிகவும் மெதுவாகச் சென்றன.
சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் சாலையோரங்களில் இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் சில இடங்களில் போக்குவரத்திற்குத் தற்காலிக இடையூறு ஏற்பட்டது. மலைப்பாதையில் மூடுபனி மற்றும் சாரல் மழை நீடிப்பதால், வளைவுகளில் வாகனங்களை இயக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பணிகளுக்குச் சென்று வருகின்றனர்.
