விருதுநகர் மாவட்டம், 108 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியத் தலமாகவும், தமிழக அரசின் முத்திரைச் சின்னமாகத் திகழும் கோபுரத்தைக் கொண்டதுமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தலம், மூலவர் வடபத்ரசாயி பள்ளிகொண்ட கோலத்திலும், பெரியாழ்வார் மற்றும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நாச்சியார் அவதரித்த பெருமையையும் கொண்டதால் ‘முப்புரி ஊட்டிய தலம்’ என்று போற்றப்படுகிறது. மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி பாவை நோன்பு நோற்ற ஆண்டாள், பங்குனி உத்திர நன்னாளில் திருவரங்கத்து ரங்கநாதரை மணம் புரிந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு அடுத்தபடியாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டுக்கான மார்கழி நீராட்ட விழா கடந்த 20-ம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ‘பகல் பத்து’ உற்சவத்தின் பத்தாம் நாளில், ஆண்டாள் மற்றும் ரங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி, பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குத் திருக்காட்சி அளித்தனர். ‘ராப்பத்து’ உற்சவத்தின் முதல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை, தமிழகத்திலேயே முதல் கோயிலாக அதிகாலை 5.30 மணிக்கே ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமபத வாசல் திறக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. முன்னதாக, அதிகாலை 3.30 மணி அளவில் பெரிய பெருமாள், ஆண்டாள் மற்றும் ரங்கமன்னார் ஆகியோருக்கு விஸ்வரூப தரிசனமும், வைர வைடூரிய ஆபரணங்கள் சூட்டப்பட்டுச் சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றன.
பரமபத வாசலுக்கு முன்பாக அரையர் வியாக்யானம் மற்றும் வேத மந்திரங்கள் முழங்கச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டதும், ‘கோவிந்தா… கோவிந்தா…’ என்ற பக்தர்களின் பக்தி முழக்கங்களுக்கு இடையே பெரிய பெருமாள் முன்னே செல்ல, அவரைத் தொடர்ந்து ஆண்டாள் மற்றும் ரங்கமன்னார் பின்னாடியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காணக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர். பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி தரிசனம் செய்யும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் அறங்காவலர் குழு சார்பில் செய்யப்பட்டிருந்தன.

















