தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் இன்று நடத்திய பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டம் மாவட்டத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. 1,400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது உணர்ச்சிவசப்பட்டு முழக்கமிட்ட மாநிலச் செயலாளர் மல்லிகா திடீரென மயங்கி விழுந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்; உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மாநிலச் செயலாளர் மல்லிகா, கைது செய்யப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, திமுக ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று நீண்ட நாட்களாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அங்கன்வாடி ஊழியர்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லை. கற்பித்தல் பணி மட்டுமின்றி சுகாதாரம், பேரிடர் மேலாண்மை மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) என மத்திய, மாநில அரசுகளின் அனைத்துப் பணிகளையும் நாங்கள் சுமக்கிறோம். குறிப்பாக, இப்பணியில் உள்ள பெரும்பாலான கைம்பெண்கள் போதிய ஊதியமின்றித் தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9,000 ரூபாய் வழங்க அரசு முன்வர வேண்டும்” என உருக்கமாகத் தெரிவித்தார்.
போராட்டத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 1,380 பேரைக் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். கைதானவர்களில் 1000-க்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பதால் காவல்துறை பெண் காவலர்களைக் கொண்டு அப்புறப்படுத்தினர். ஜனவரி 27-ஆம் தேதிக்குள் முதல்வர் எங்களை அழைத்துத் தகுந்த தீர்வு காணாவிட்டால், தமிழகம் தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அங்கன்வாடி ஊழியர்களின் இந்த எழுச்சிமிக்கப் போராட்டத்தால் ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் இன்று பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
