புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்கக் கட்டிடத்தில், மாவட்ட வர்த்தகக் கழகம் மற்றும் மாவட்ட திருவருள் பேரவை சார்பில், ‘மத நல்லிணக்கப் பொங்கல் விழா’ நேற்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியப் பண்பாட்டையும், மதங்களைக் கடந்து மனிதநேயத்தைப் போற்றும் தமிழரின் பொங்கல் கலாச்சாரத்தையும் முன்னிலைப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது. விழாவிற்குப் புதுக்கோட்டை வர்த்தகச் சங்கத் தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். திருவருள் பேரவை தலைவரும், டீம் ஆஸ்பத்திரி மருத்துவருமான டாக்டர் சலீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்த விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் துணை மேயர் லியாகத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் ஒரு பகுதியாகச் சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மனிதநேய மாண்பாளர் விருதுகள் அபிராமி ஜூவல்லரி எஸ். பழனியப்பன், சர்புதீன், அப்துல் ரகுமான் மற்றும் ஆரோக்கியசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டன. அதேபோல், இளம் நல்லிணக்க நாயகர் விருதுகளைக் ‘குருதிக்கூடு’ முத்துராமலிங்கம், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜா முகமது மற்றும் எம். பால்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சமூகப் பணியாற்றி வரும் சங்கமித்ரா கணபதிக்கு ‘மனிதநேய மங்கையர் திலகம்’ விருது வழங்கப்பட்டது.
அருள் தந்தை சவரிநாயகம், சுரேஷ் மற்றும் சதகத்துல்லா ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்டச் செயலாளர் கதிரேசன் வாழ்த்துரை வழங்கினார். எஸ்.ஏ. சேட்டு மற்றும் பழனியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உரையின் போது, பொங்கல் திருநாள் என்பது அறுவடைத் திருவிழா மட்டுமல்லாமல், அது அனைத்துச் சமயத்தினரையும் ஒன்றிணைக்கும் ஒரு சமூக நல்லிணக்கத் திருவிழா என்பதைப் பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர். வர்த்தகச் சங்கத்தின் துணைத் தலைவர் பசுபதி, விவசாய அதிகாரி பழனியப்பன், செந்தூரன் கல்லூரித் தலைவர் வைரவன், குழந்தைகள் நல மருத்துவர் சாந்தம், சவரிமுத்து, திருப்பதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சையது இப்ராஹிம் மற்றும் அழகப்பா ஸ்டுடியோ அருணாச்சலம் உள்ளிட்டப் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சர்வ சமயப் பிரார்த்தனையுடன் தொடங்கிய இந்த விழாவில், இந்து, இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். புதுக்கோட்டை நகரின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு, நகரத்தின் சமூக ஒற்றுமையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது. விழாவின் நிறைவில் மாவட்ட வர்த்தகக் கழகப் பொருளாளர் கே.எஸ்.கே.ஏ. ராஜா முகமது நன்றி கூறினார்.
