தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளையும், கைவினைத் தொழில்களையும் பாதுகாத்து, அத்தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு ‘கலைஞர் கைவினைத் திட்டத்தை’ மிகச்சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டு 286 கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினர்.
கடந்த 2025 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே முதல் கட்டமாக 161 பேருக்கு ரூ.67 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு பெருமளவிலான பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, கைவினைஞர்கள் எவ்விதப் பிணையமுமின்றி ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும். இதில் கடன் தொகையில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.50,000) மானியமாகவும், வட்டி விகிதத்தில் 5 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படுவது சிறு குறு தொழிலாளர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும். 35 வயது பூர்த்தியடைந்த கைவினைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
பாரம்பரியத் தொழில்களான மண்பாண்டம் செய்தல், சிற்பம் வடித்தல், உலோக மற்றும் மர வேலைப்பாடுகள் முதல் நவீன அழகுக்கலை, தையல் மற்றும் சிகையலங்காரம் வரை மொத்தம் 25 வகையான கைவினைத் தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. குறிப்பாகக் கட்டுமான வேலைகள், நகை தயாரித்தல், மீன் வலை மற்றும் படகு கட்டுதல், பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் பொம்மை தயாரித்தல் போன்ற நலிவடைந்து வரும் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கான நிதி மட்டுமின்றி, அத்தொழிலைச் சிறப்பாக நடத்துவதற்கான நவீனப் பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் மாவட்ட தொழில் மையம் வழங்க உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள கைவினைஞர்கள் www.msmeonline.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆதார் மற்றும் வங்கி விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கைவினைத் தொழில்கள் குறித்த விழிப்புணர்வுக் கையேடுகளும் வெளியிடப்பட்டன. விழாவில் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் எம்.சரவணன், திட்ட மேலாளர் எம்.ராமமூர்த்தி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மாதேஸ்வரன் மற்றும் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள் திரளாகக் கலந்துகொண்டனர். அரசின் இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் கிருஷ்ணகிரி மாவட்ட கைவினைஞர்களின் வாழ்வாதாரம் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது.
