மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில், முன்பனிக் காலத்தின் தாக்கம் வழக்கத்தை விட மிகத் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக மதிய வேளைக்குப் பின்னரே பனியின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கி, நள்ளிரவில் வெடவெடக்கும் கடும் குளிர் நிலவி வருகிறது. நகரின் முக்கியப் பகுதிகளான ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா, ஜிம்கானா மற்றும் அப்சர்வேட்டரி பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை சரிந்து காணப்படுகிறது. குறிப்பாகத் தாழ்வான சமவெளிப் பகுதிகளான கீழ்பூமி மற்றும் மன்னவனூர் பகுதிகளில் நிலவும் உறைபனியால் (Frost) புல்வெளிகள் அனைத்தும் வெள்ளைப்போர்வை போர்த்தியது போலக் காட்சியளிக்கின்றன. கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியிலிருந்து பார்த்தால், சமவெளிப் பகுதிகளில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் கூடப் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டு, மேகக் கூட்டங்களுக்குள் மிதப்பது போன்ற ரம்மியமான சூழல் நிலவுகிறது. இருப்பினும், இந்த அதீதக் குளிர் மக்களின் அன்றாட வாழ்வியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதியம் 3:00 மணி முதல் மறுநாள் காலை 11:00 மணி வரை நீடிக்கும் இந்தப் பனிமூட்டத்தால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடும் குளிரின் காரணமாகப் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சரும வெடிப்பு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மருத்துவமனைகளில் சளி மற்றும் காய்ச்சலுக்கான சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம், குளிரைத் தணிக்க உதவும் ஸ்வெட்டர், குல்லாய் உள்ளிட்ட கம்பளி ஆடைகளின் விற்பனை நகரின் முக்கியச் சந்தைப் பகுதிகளில் சூடுபிடித்துள்ளது. வரும் நாட்களில் உறைபனியின் தாக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் அதிகாலையில் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழக்கமான குளிரைத் தாண்டி, தற்போது நிலவும் உறைபனி விவசாயப் பயிர்களையும் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

















