கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் முன்னோடித் திட்டமான ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பிரம்மாண்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை இணைந்து நடத்திய இந்த முகாமினை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தொடங்கி வைத்து, ஆய்வுகளை மேற்கொண்டார். ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்து, முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 10 வட்டாரங்களில் 30 முகாம்களும், மாநகராட்சிப் பகுதிகளில் 3 முகாம்களும் என மொத்தம் 33 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இதுவரை 22 முகாம்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 23-வது முகாம் குருபரப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 1,156 பொதுமக்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டு, உயர்தர மருத்துவச் சேவைகளைப் பெற்றனர். இம்முகாமில் இதய நோய், சிறுநீரகப் பாதிப்பு, கண் மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவப் பிரிவுகளின் கீழ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, முகாமிற்கு வந்திருந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டதோடு, பொதுமக்களுக்கு எக்ஸ்ரே, ஈசிஜி (ECG), ஈக்கோ மற்றும் அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட நவீன பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டன. தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வும், தேவையான மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. முகாமில் கண்டறியப்பட்ட மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உடனடியாகப் பரிந்துரைக்கப்பட்டனர்.
முகாமின் ஒரு பகுதியாக, 10 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசின் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 45 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும் கலெக்டர் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 73 மாற்றுத்திறனாளிகளுக்குப் புதிய தேசிய அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவத்தைச் சென்றடையச் செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த முகாம், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.















