“2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வென்றால், அதில் பாஜகவும் ஆட்சியில் பங்கேற்கும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்த நிலையில், இந்தக் கருத்துக்கு தமிழக வெற்றிக்கழகம் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களுக்கு வழங்கிய பேட்டிகளில், அமித்ஷா, “தமிழக மக்கள் தற்போது ஊழல், வாரிசு அரசியல், மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் சலிப்படைந்துள்ளனர். அதிமுக-பாஜக கூட்டணி இந்த நிலையை மாற்றும். நாங்கள் ஆட்சியில் பங்கேற்போம். மேலும், விஜய்யின் தவெக மற்றும் பிற கட்சிகளை கூட்டணியில் இணைக்க முயற்சி செய்வோம்” என கூறியிருந்தார்.
அவரின் இந்தக் கருத்துகள், அதிமுக-பாஜக கூட்டணியில் ‘விஜய் தலைமையிலான தவெகவும் சேர்க்கப்படலாம்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. ஆனால், இதற்கு தொடர்ந்து தவெக தரப்பில் உறுதிப்படமான மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தவெக தலைமை தரப்பின் பதிலில், “பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கவே மாட்டோம். தேர்தலில் தவெக தான் தலைமையிலான கூட்டணி அமைக்கும். விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். அமித்ஷா கூறியது, பிற கட்சிகளுக்கே பொருந்தும். தவெக மீது எந்தவிதமான தாக்கமும் அது ஏற்படுத்தாது,” எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் கூறுகையில்,
“தேசத்தை பாதுகாப்பதைவிட்டு, பாஜகவை தமிழ்நாட்டில் நிலைநாட்ட அமித்ஷா போராடுகிறார். பாஜகவை எதிரியாக வைத்து உருவான ஒரே இயக்கம் தவெக. அந்த அடையாளத்தில் எந்த மாற்றமும் இல்லை. இஸ்லாமிய சகோதர்களுக்கு முற்றிலும் எதிரான சிந்தனையைக் கொண்ட பாஜகவுடன், நாங்கள் கூட்டணி வைக்க முடியாது,” என்றார்.
இதன் மூலம், 2026 தேர்தலுக்கு முன்னர், முக்கியமான அரசியல் நிலைப்பாட்டை தவெக உறுதியாக வெளிப்படுத்தியுள்ளது.