மலையாள சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் தனித்துவமான இடத்தைப் பிடித்த பாசில் ஜோசப், இப்போது தயாரிப்பாளராக களம் இறங்குகிறார்.
குஞ்சிராமாயணம்’, கோதா’, மின்னல் முரளி’ போன்ற படங்களை இயக்கிய பாசில், சமீபத்தில் ஃபேலிமி’, நுனக்குழி’, பொன்மான்’, மரணமாஸ்’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றார். மேலும், சிவகார்த்திகேயனின் வரவிருக்கும் பராசக்தி’ மூலம் தமிழ் திரையுலகிலும் அவர் நடிப்புத் துறையில் காலடி எடுக்கிறார்.
இப்போது தனது பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கும் பாசில், ‘Basil Joseph Entertainment’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர், “இதுவரை நான் செய்யாத ஒன்றை முயற்சிக்கிறேன். திரைப்படத் தயாரிப்பில் நுழைகிறேன். கதைகளை தைரியமாகவும், புதுமையாகவும் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பயணம் எங்கு அழைத்துச் செல்கிறது என்பதை பார்ப்போம். என் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அருண் அனிருத்தன் இயக்கத்தில் இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்க உள்ளது.