நகரில் செயல்பட்டு வந்த ஒரு நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் தம்பதி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூரை சேர்ந்த சிவகுருநாதன் (வயது 55) மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 40) ஆகியோர், புதுப்பாளையத்தில் “எஸ்.ஐ.டி. நர்சிங் இன்ஸ்டிடியூட்” என்ற பெயரில் நர்சிங் கல்லூரி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இங்கு கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இணை இயக்குநர் மணிமேகலை, புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, கடலூர் டி.எஸ்.பி. ரூபன்குமார், இணை இயக்குநர் மணிமேகலை, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் இணைந்து அந்த இன்ஸ்டிடியூட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கருக்கலைப்பு சாதனங்கள், மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
பொதுமக்கள் நலத்தைக் கவனிக்க வேண்டிய சுகாதாரத் துறையைச் சேர்ந்த 6 பேரும் மருத்துவப் பட்டம் இல்லாமலேயே, சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் இதுகுறித்து கூறுகையில், “சிவகுருநாதன் பி.எஸ்சி. அக்ரி படித்தவர். டில்லியில் சித்தா மருத்துவம் பயின்றதாக கூறி நர்சிங் இன்ஸ்டிடியூட் நடத்தி வந்துள்ளார். அவரது மனைவி உமா மகேஸ்வரி நர்சிங் படித்தவர். இந்த செயலில் பங்கேற்ற மற்றவர்கள் பண்ருட்டியை சேர்ந்த மூர்த்தி (37), கார்மாங்குடியைச் சேர்ந்த வீரமணி (36), நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அபியால் (50), பெரிய காரைக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கம் (43) ஆகியோரும் உள்ளனர். இவர்களில் சிலர் அரசு சுகாதார நிலையத்தில் பணியாற்றும் நர்ஸ் மற்றும் மருந்தாளுநர்களாகவும் உள்ளனர்” என்றார்.
இந்தக் குழுவின் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.