தி.மு.க. ஆட்சியில் பெண்களின் நலனுக்கு, அதிக முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அந்த வகையில், 25 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அண்ணா திருமண மாளிகையை, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த திருமண மாளிகையில் 15 ஜோடிகளுக்கு திருமணத்தையும் முதலமைச்சர் நடத்தி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். முதல்வர் கல்விச் சோலை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார். இறுதியாக மணமகன்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் பொண்டாட்டி பேச்சை கேட்டு அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறியவுடன் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

















