காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் 31-வது சித்தி தினத்தை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற ஆராதனை விழாவில், “குரு காட்டிய வழியில் சென்றால் நன்மைகள் பெருகும்” எனப் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் புலவர் ராமலிங்கம் உரையாற்றினார்.
மதுரை ‘அனுஷத்தின் அனுகிரகம்’ அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் இந்த ஆராதனை விழாவில், ‘குருவே சரணம்’ என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம் பேசியதாவது: “ஆன்மிக வரலாற்றில் தென்னாட்டிற்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. இந்து தர்மத்தைக் காக்கும் ஆலயங்கள் நிறைந்த பூமி இது. காஞ்சி மகா பெரியவர் ஒருமுறை குறிப்பிடும்போது, ‘உலகம் ஒரு வீடு என்றால், அதில் இந்தியா என்பது பூஜை அறை’ என்றார். அத்தகைய புனிதமான மண்ணில், எண்ணற்ற ரிஷிகளும் ஞானிகளும் அவதரித்த தமிழ்நாட்டில் மகா பெரியவர் வாழ்ந்தது நாம் செய்த பெரும் தவப்பயன்.”
“கேட்டுக் கொடுப்பது தானம்; கேட்காமலேயே வாரி வழங்குவது தர்மம். இந்த இரண்டும் நம்முடைய வருங்காலச் சந்ததியினருக்குப் புண்ணியத்தைச் சேர்த்து வைக்கும் என்று பெரியவர் அடிக்கடி வலியுறுத்துவார். மனித மனம் என்பது எளிதில் திருப்தி அடையாத ஒன்று. நம்மிடம் இருப்பதை விட்டுவிட்டு, இல்லாததை நினைத்து ஏங்குவதுதான் அதன் இயல்பு. ‘இருப்பது இறைவன் தந்தது, இல்லாதது இறைவன் இனி தரப்போவது’ என்ற மனப்பக்குவம் கொண்டால் வாழ்வு மகிழ்ச்சியாக அமையும்.”
இன்றைய இளைய தலைமுறை குறித்துப் பேசிய அவர், “பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமெனில், பெற்றோர்களே அவர்களுக்கு முதல் குருவாக இருந்து நல்வழிப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் முன்னேற ஒவ்வொருவருக்கும் ஒரு குரு அவசியம். ஜகத்குருவாகத் திகழும் மகா பெரியவரின் பாதங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டால், எந்தத் துன்பமும் நம்மை நெருங்காது” என்று குறிப்பிட்டார்.
மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள எஸ்.எம்.கே. திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ‘மதுரை அனுஷத்தின் அனுகிரகம்’ நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அனுஷம் உற்சவத்தில், மகா பெரியவரின் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைகளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், புஷ்பாஞ்சலி மற்றும் மகா தீபாராதனை நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்ய உள்ளனர்.
