தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளியிடத் தயாராக இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம் திடீரென தனது வெளியீட்டை மாற்றி அறிவித்துள்ளது.
முதலில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூட்’ திரைப்படம் மற்றும் LIK இரண்டும் ஒரே நாளான தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் இருந்த நிலையில், தற்போது LIK படக்குழு தங்கள் படத்தை டிசம்பர் 18-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது.
படக்குழுவின் அறிக்கையில், “டூட் திரைப்படம் அதே நாளில் வெளிவரவிருப்பதால், இரண்டு படங்களுக்கும் வசூல் பாதிப்பு ஏற்படக்கூடும் என நினைத்து, நாங்கள் நல்விருப்பத்துடன் பின்வாங்குகிறோம். மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் பலமுறை தேதியை மாற்றக் கோரியிருந்தாலும், அது சாத்தியமாகவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் எதிரெதிர் திசையில் பாய்ந்தால் அது பேராபத்தில் தான் முடியும். அதுபோல இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியானால் பாதிப்பு தவிர்க்க முடியாது. அதனால் நாங்கள் பின்வாங்கி ‘டூட்’ படத்துக்கு வழிவிடுகிறோம்,”
என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் மேலும் கூறியதாவது :
“இளம் இயக்குநர் கீர்த்திஸ்வரனின் முயற்சிக்கு நாங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கிறோம். எங்கள் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கும் நன்றி. வரும் டிசம்பர் 18 அன்று ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிடுகிறோம்,” என தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகும் ‘டூட்’ திரைப்படமும், அதன்பின் டிசம்பரில் வெளியாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படமும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளன.
