சிவகங்கை மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, நெடுஞ்சாலைத் துறை பணிகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில் இரண்டு புதிய நவீனத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று திறந்து வைத்தார். சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட ஆய்வு மாளிகை வளாகத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருப்பத்தூர் உட்கோட்ட அலுவலக வளாகத்தில் 1.74 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் இந்த அதிநவீன ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தரக்கட்டுப்பாட்டு உபகரணங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர், பொதுமக்களின் வரிப்பணம் ஒரு பைசா கூட வீணாகாமல் தரமான சாலைகள் அமைப்பதை இந்த ஆய்வகங்கள் உறுதி செய்யும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திறப்பு விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், “இந்தியத் துணைக்கண்டத்திலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் முதலமைச்சர் அவர்கள் அனைத்துத் துறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்து வருகிறார். வெறும் நலத்திட்ட உதவிகளுடன் நின்றுவிடாமல், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 2,122.956 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைகள் சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலைகள் மற்றும் மேம்பாலப் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “சாலைப் பணிகள் என்பது வெறும் தார் ஊற்றுவது மட்டுமல்ல; அதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் துல்லியமாக இருக்க வேண்டும். இனி சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்படும் சாலைகளின் தரம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் உறுதித்தன்மை ஆகியவற்றை இந்த புதிய ஆய்வகங்கள் மூலம் உடனுக்குடன் பரிசோதிக்க முடியும். தரம் குறைவாக இருந்தால் அந்தப் பணிகள் ஏற்கப்படமாட்டாது. பொதுமக்களின் தேவைகளை முன்கூட்டியே அறிந்து, இத்தகைய நவீனத் தொழில்நுட்ப வசதிகளைக் கிராமப்புறம் வரை கொண்டு சேர்ப்பதில் முதலமைச்சர் அவர்கள் பிற மாநிலங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்” என்று புகழாரம் சூட்டினார்.
இந்த விழாவில் கோட்டப் பொறியாளர் சந்திரன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் திருப்பத்தூர் பேரூராட்சித் துணைத்தலைவர் கான் முகமது, உதவி கோட்டப் பொறியாளர்கள் பவித்ரா, சையது இப்ராஹிம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நவீன ஆய்வகங்களின் வருகையால், மாவட்டத்தில் இனி அமைக்கப்படும் அனைத்துச் சாலைகளும் நீண்ட ஆயுளுடனும், சர்வதேசத் தரத்துடனும் அமையும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.















