தேசியக் கொடி வடிவிலான கேக் வெட்டி IAS–IPS அதிகாரிகள் சர்ச்சையில்

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக்கொடியை ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமைதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை குறியிட்டு வெண்புறாக்கள், மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கும் நிகழ்வும் நடந்தது. 80 பயனாளிகளுக்கு ரூ.84.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணி புரிந்த 229 அரசு அலுவலர்களுக்கும், காவல் துறையில் சிறந்து விளங்கிய 74 அதிகாரிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் டிஐஜி மூர்த்தி, காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், டிஆர்ஓ கோவிந்தராஜூலு, வன அலுவலர் ஹேமலதா, கோட்டாட்சியர் ராஜமனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆனால், விழா முடிந்ததும் நடந்த ஒரு நிகழ்ச்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், 16 அடி நீளம், 3.25 அடி அகலம், 79 கிலோ எடையுடைய தேசியக் கொடி வடிவிலான கேக்கை இணைந்து வெட்டி, பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கினர்.

மூவர்ணம் மற்றும் அசோகச் சக்கரத்துடன் வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டிய சம்பவம், தேசியக் கொடியை அவமதித்ததாகக் கருதி, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

Exit mobile version