கோவை: “நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் பல தொழில்கள் ஆரம்பிக்கப் போகிறேன்,” என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களுடன் பேசிய அவர், “இயற்கை விவசாய மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி கோவை வருகிறார். நான் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறேன். அதில் தவறு எதுவும் இல்லை. நான் யாரிடமிருந்தும் மிரட்டி பணம் பறிக்கவில்லை. நேர்மையான வழியில் தொழில் செய்து வாழ்கிறேன்,” என்றார்.
அவர் தொடர்ந்து, “நான் அரசியலும் செய்கிறேன். அதே நேரத்தில் வாழ்வாதாரத்திற்காக தொழிலிலும் ஈடுபடுகிறேன். நான் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது என்று யார் சொல்வது? அதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நான் அரசியலில் இருந்து விலகவில்லை. எனது வேலைக்கும், விவசாயத்திற்கும், தொழிலுக்கும் நேரம் ஒதுக்கி செய்கிறேன்,” என கூறினார்.
மேலும், “நான் வரி கட்டாமல் இருந்தால் சொல்லுங்கள். எனது நிறுவனத்தில் ஜிஎஸ்டி கட்டவில்லை என்றால் கேளுங்கள். அதைவிட என்னை ஏன் குற்றம் சொல்கிறீர்கள்? என்னை தொழில் செய்யத் தடை செய்தால் நான் எதைச் சாப்பிடுவேன், என் குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பேன்?” என எதிர்வினை தெரிவித்துள்ளார்.
“நான் சோம்பேறியாக வீட்டில் உட்கார்வதில்லை. 24 மணி நேரமும் கடினமாக உழைக்கிறேன். நீங்களும் உழையுங்கள், வெளிநாடுகளில் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு இந்தியாவில் செயல்படுத்துங்கள். உங்களது சொந்த உழைப்பில் வாழுங்கள்,” என அறிவுரை கூறினார் அண்ணாமலை.
முதல்வர் ஸ்டாலினை நோக்கி அவர், “இன்றைக்கு கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. குற்றவாளிகள் தண்டனை பெற்றும் மீண்டும் குற்றம் செய்கிறார்கள். கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இடம் பல ஆண்டுகளாக பிரச்சனையாக இருந்து வருகிறது. போலீசார் தங்கள் பணி முறையை சீர்செய்ய வேண்டும்,” என கேட்டுக்கொண்டார்.
அத்துடன், டில்லி குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, “இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த டாக்டர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. பயங்கரவாதம் என்பது மதத்தை தாண்டிய அபாயகரமான ஒன்று. மும்பை 26/11 தாக்குதலைப் போல, டில்லியில் நடந்தது மிக மோசமானது. இதனை அனைவரும் இணைந்து கண்டிக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
“தமிழகத்தில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் திறம்பட பணியாற்றி வருகின்றன. ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் இதற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும்,” என கூறி பேச்சை முடித்தார் அண்ணாமலை.
