ஈரோடு: அதிமுகவில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளில் இருந்த மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையனை நீக்கியதற்கான காரணமாக, கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான செயல்பாடுகள், ஒழுங்கு மீறல், மற்றும் அதிமுக சட்டத் திட்டங்களை மீறிய நடத்தை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, செய்தியாளர்கள் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, “நாளை காலை 11 மணிக்கு இதுபற்றி விரிவாக விளக்கம் அளிக்கிறேன். அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்தே பேசுவேன்,” என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
சில நாட்களாகவே எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிலரை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும், அது நடக்காவிட்டால் தானே நடவடிக்கை எடுப்பேன் எனவும் செங்கோட்டையன் வெளிப்படையாக கூறியிருந்தார்.
மேலும், நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. தேவர் ஜெயந்தி விழாவில் மூவரும் ஒரே காரில் பயணித்தது கூட கட்சிக்குள் அதிருப்தியை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீக்க அறிவிப்பு வெளியாகிய சில நிமிடங்களிலேயே செங்கோட்டையன் தனது பதிலைத் தரப்பதாக அறிவித்திருப்பது, நாளைய தினம் அவர் வெளியிடும் விளக்கத்திற்கு அதிக கவனம் திரும்பியிருக்கிறது.
 
			















