ஈரோடு :
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தி தெரிவித்த செங்கோட்டையன், பின்னர் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் அதிமுக–பாஜக கூட்டணி உருவான நிலையில், செங்கோட்டையன் அமைதியாக இருந்தாலும், கட்சி தலைமையின் மீதான அதிருப்தியில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியானது. இதையடுத்து, அவர் கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, வரும் செப்டம்பர் 5ஆம் தேதி “மனம் திறந்து பேசுவேன்” என அறிவித்தார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், செங்கோட்டையனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமா அப்போது கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று செங்கோட்டையனை சந்தித்த சத்தியபாமா, “செங்கோட்டையன் நல்ல முடிவு எடுப்பார். செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நிச்சயமாக பங்கேற்பேன். உடல்நிலை காரணமாக நேற்று கலந்துகொள்ள முடியவில்லை. 2026ல் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே நோக்கம்; அதற்காக கட்சி நலனில் செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.