“மகளுக்கு நீதி கிடைக்கும் வரை உணவு உண்ண மாட்டேன்” – ரிதன்யா தாயின் கதறல் !

“மகளுக்கு நீதி கிடைக்கும் வரை உணவு உண்ண மாட்டேன்” என கூறியுள்ளார், தற்கொலை செய்துகொண்ட புதுமணப்பெண் ரிதன்யாவின் தாய் ஜெயசுதா. அவரது கண்ணீரும், கோபமும் மக்கள் மனதை உருக்கும் வகையில் பேசப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா, திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணனின் பேரனும் ஈஸ்வரமூர்த்தி என்பவரின் மகனுமான கவின்குமாரை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில், சேவூர் சாலையில் காரில் உட்கார்ந்தபடியே தென்னை மரப்பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தார்.

மரணத்திற்கு முன் தனது தந்தைக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய ஆடியோ பதிவுகளில், கணவர் கவின், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் தான் உடல் மற்றும் மன ரீதியாகத் தொடர்ந்து துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதையடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்தது. கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர். மாமியார் சித்ராதேவி பைண்டிங் ஆணையின் அடிப்படையில் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

சம்பவம் தொடர்பாக புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டி அளித்த ரிதன்யாவின் தாயார் ஜெயசுதா, “என் மகளின் இறப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். விசாரணை மெதுவாக நடக்கிறது. அதனால்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தோம். மகளுக்கு நீதி கிடைக்கும் வரை நான் உணவுக்குத் தீட்சை இருக்கப்போகிறேன்” என கண்ணீருடன் கூறினார்.

இச்சம்பவம் தமிழகமெங்கும் சோகத்தையும், சமூக நீதி குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Exit mobile version