தஞ்சை :
தஞ்சையில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து 2026 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் நிறுவுவேன் என்று உறுதியளித்தார். அதேசமயம் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
“தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நெல் கொள்முதல் முறையாக நடைபெறவில்லை. தமிழகத்தில் லாரி ஒப்பந்தம் வழங்கும் போது பெரும் தவறு நடந்துள்ளது. ஒரே நிறுவனத்துக்கே ஒப்பந்தம் கொடுத்ததே இன்றைய பிரச்சினைகளுக்கு காரணம். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் எந்த இடத்திலும் தடைகள் ஏற்பட்டதில்லை,” என சசிகலா கூறினார்.
அவர் மேலும், “தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தில் ஒரு ஆண்டுக்குள் ஐந்து மேலாண்மை இயக்குநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் நிர்வாகம் சீராக நடைபெறவில்லை. அதிகாரிகளை குறை சொல்ல முடியாது; ஆனால் நிர்வாகத்தை வழிநடத்த இந்த அரசால் முடியவில்லை. நெல் கொள்முதலில் பெரும் குழப்பம் நிலவுகிறது,” என்றார்.
திமுக அரசை கடுமையாக விமர்சித்த சசிகலா, “இந்த அரசு விளம்பரத்தில்தான் நம்பிக்கை வைத்துள்ளது. அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவதால் சாக்கு, சணல் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. திமுக அரசில் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். நான் எதிர்பார்த்தது போல அவர்கள் திருந்தவில்லை; ஆகவே 2026-ல் மக்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள்,” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “மத்திய குழுவினர் ஆய்வுக்காக வந்துள்ளார்கள்; ஆனால் அவர்களுக்கு உண்மையான நிலைமை காட்டப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. மாநிலம் முழுவதும் 625 அரிசி அரவை ஆலைகள் உள்ளன. அவற்றுக்கு நெல் மூட்டைகள் சரியாக அனுப்பப்பட்டிருந்தால், சுமார் 11 லட்சம் டன் அரிசி சேமித்து வைத்திருக்கலாம். அதையும் அரசு புறக்கணித்துள்ளது,” என்றும் சசிகலா கூறினார்.
“2026 தேர்தலில் மக்கள் தங்களின் தீர்ப்பை தெளிவாக அளிப்பார்கள். ஜெயலலிதாவின் நல்வாழ்வு ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன்,” என அவர் வலியுறுத்தினார்.

















