விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்பேன் ! ஆனால் ஒன்று… சீமான் கொந்தளிப்பு

நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கில் மன்னிப்பு கேட்பது குறித்த கேள்விக்கு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பதிலளித்ததோடு, செய்தியாளர் சந்திப்பில் சில நேரங்களில் கடும் கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய சீமான், விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா என்ற கேள்விக்கு,
“நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வரும் ஒருவரிடம் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? கோர்ட் உத்தரவிட்டால் மன்னிப்பு கேட்பேன். ஆனால் நீதிமன்றம் இன்னும் அப்படி எதுவும் சொல்லவில்லை. அந்த பெண் இருக்கும் சமூகத்தில் பிறந்ததற்கே நான் வெட்கப்படுகிறேன்” என பதிலளித்தார்.

மேலும், “திருமணமான ஒருவரை தேர்தல் வரும் போதெல்லாம் கூட்டி வந்து குற்றச்சாட்டு வைப்பது தவறு. நானே ஒரு பெண்ணை குற்றம் சாட்டினால், என்னை மக்கள் அடித்துக் கொண்டிருப்பார்கள். சட்டமும் மனச்சான்றும் இரண்டும் இருக்கின்றன” என்று சீமான் வலியுறுத்தினார்.

அதேவேளை, தமிழக அரசியல் சூழ்நிலையை விமர்சித்த அவர், “விஜய்யை எதிர்த்து பேசினால் திமுகவின் கைக்கூலி என்கிறார்கள். திமுகவை எதிர்த்தால் பாஜகவின் கைக்கூலி என்கிறார்கள். தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது. வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

விஜய் குறித்து பேசுகையில், “அவர் எனக்கு எப்போதுமே தம்பிதான். அவர் அரசியலில் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதே என் பொறுப்பு” என்று சீமான் குறிப்பிட்டார்.

வழக்கின் பின்னணி

2011-ல் நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமீபத்திய விசாரணையில், நீதிமன்றம் இரு தரப்பும் சமரசமாக முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், சீமான் விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு, செப்டம்பர் 24 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில், “சீமான் தரப்பு மன்னிப்பு கேட்க விருப்பமில்லை. நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version