“எனக்கும் சில விருப்பு வெறுப்புகள் இருக்கத்தான் செய்யும்” – அனுஷ்கா

அனுஷ்கா – கிரிஷ் கூட்டணியில் உருவாகியுள்ள தெலுங்கு படம் ‘காட்டி’ செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்த நடிகை அனுஷ்கா, தனது புதிய படங்கள், கதாப்பாத்திரங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.

‘காட்டி’ படத்தில் நிறைய சண்டைக் காட்சிகளில் நடித்ததற்கான அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில்,
“கதாப்பாத்திரத்துக்குத் தேவையானது என்றால் கஷ்டப்பட வேண்டுமே. நான் அதற்காக 100 சதவீத உழைத்திருக்கிறேன்” என்றார்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா கதாப்பாத்திரத்துக்கும், காட்டி படத்தில் தனது பாத்திரத்துக்கும் ஒற்றுமை இருப்பதாக கேட்கப்பட்ட போது,
“அது குறித்து சுகுமாரிடம்தான் கேட்க வேண்டும். ஆனால் இந்த யோசனை நன்றாக இருக்கிறது” என பதிலளித்தார்.

பிரபாஸுடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டுமென்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்ததற்கு, “எனக்கும் அதில் விருப்பம் உண்டு. ஆனால் பாகுபலிக்கு பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டுமானால், அதற்கு தகுந்த ஒரு வலுவான கதை அமைய வேண்டும். அப்படி அமைந்தால், பிரபாஸுக்கும் பிடித்தால் அது நிச்சயமாக நடக்கும்” என கூறினார். மேலும், பாகுபலி படக்குழுவுடன் இன்னும் தொடர்பில் உள்ளதாகவும், அவர்களுடன் இணைந்து ஒரு ஆவணப்படத்தில் பணியாற்றியிருப்பதாகவும், அது விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்களை மையப்படுத்திய கதைகள் குறித்து தனது பார்வையைப் பகிர்ந்த அனுஷ்கா, “இனி ஆண், பெண் என்ற பேதமில்லை. எனக்கு வரக்கூடிய பல கதைகள், முந்தைய படங்களின் சாயலிலோ அல்லது என்னால் ஒன்ற முடியாத வகையிலோ இருக்கின்றன. ஆனால் மிஸ் ஷெட்டி, காட்டி, மலையாளத்தில் நடித்த படம் எனக்கு மிகவும் பிடித்தவை. அதனால்தான் தேர்ந்தெடுத்து நடித்தேன்” என்றார்.

மலையாள சினிமாவில் நடிக்கும் அனுபவத்தைப் பற்றி அவர், “அந்தப் படம் முடிந்துவிட்டது. நாட்டுப்புறக் கதையை மையமாகக் கொண்டு உருவாகிய இப்படம், இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும். இது எனக்கு மிகவும் புதுமையான கதாப்பாத்திரம். மேலும் இது மலையாளத்தில் என் அறிமுகப்படமாகும்” என தெரிவித்தார்.

ஏன் பொதுவில் அதிகமாகக் காணப்படுவதில்லை என்ற கேள்விக்கு அனுஷ்கா, “அது என் தனிப்பட்ட முடிவு. புரமோஷன், விருது விழா, குடும்ப நிகழ்வுகள் என எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. சில உடல்நலப் பிரச்சனைகள் இருந்தது. அந்த நேரத்தில் இரண்டு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினேன் – காட்டி மற்றும் மலையாள படம். நான் ஆரம்பம் முதலே தனிமையான நபர். என் வேலையில் நேர்மையாக இருந்தால் ரசிகர்கள் என்னை மதிப்பார்கள் என்பதில் நம்பிக்கை உண்டு. எனக்கும் சில விருப்பு வெறுப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எதிர்காலத்தில் என்னை அடிக்கடி காணலாம்” எனக் கூறினார்.

Exit mobile version