தஞ்சாவூர்: கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்குவின் படத்திறப்பு விழா தஞ்சாவூரில் உள்ள புதுகாரியப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசும்போது அரசியல், கூட்டணி, விமர்சனங்கள் அனைத்தையும் ஒரே தாளில் இணைத்து கமல் வைத்த உரை பரபரப்பை ஏற்படுத்தியது.
அங்கு பேசிய கமல்ஹாசன், “அரசியலில் மாற்றுக்கருத்து இல்லாமல் ஜனநாயகம் கிடையாது. ஆனால் நாடு என்றால் நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். நான் திமுக கூட்டணியில் சேர்ந்தது குறித்து சிலர் ‘ரிமோட்டை தூக்கி போட்டவர் நீங்க தானே? எப்படி அங்கே போனீர்கள்?’ என்று கேட்கிறார்கள். ரிமோட்டை நான் தூக்கிப் போட்டேன்… ஆனால் அதை வேற ஒருவன் தூக்கிக்கிட்டு ஓடிட்டான். அப்படிப்பட்ட இடம் நமக்கான திசை இல்லை,” என்று கூறியபோது, அவர் யாரை குறிப்பிட்டார் என்பது அங்கு இருந்த ரசிகர்களுக்கு உடனே புரிந்தது போல ஆரவாரம் எழுந்தது.
தொடர்ந்து கமல், “நம்முடைய ரிமோட் நம் மாநிலத்திலேயே இருக்க வேண்டும். கல்வி போன்ற முக்கியமான விஷயங்களும் நாமே முடிவு செய்ய வேண்டியவை. பிறர் கையில் சென்று விடக்கூடாது. ரிமோட்டை எடுத்துட்டாங்கன்னா பரவாயில்லை… திருப்பிக் கொடுங்க, ஒளிச்சாவடியில் இருந்தாலும் வைக்கலாம். ஆனால் இனிமேல் ரிமோட்டை ஆயுதமா பயன்படுத்தி ஒருவரை ஒருவர் அடிக்க வேண்டாம். அப்படி அடிச்சா எவனாவது வந்து ரிமோட்டை ஏந்திக்கிட்டு போய்விடுவான்,” என கூட்டணிக்கு பின்னால் உள்ள காரணத்தை மறைமுகமாக விளக்கினார்.
“இதை மாற்று அரசியல் என்று யாரேனும் நினைத்தால் அது பாசிசம். ஜனநாயகத்தில் இந்தத் தகராறுகள் இருப்பது நியாயம். ஆனால் அன்பு, தொண்டு, ஒற்றுமை – இவையே மனிதர்களை இணைப்பவை” என்று கமல் உரையை முடித்தார். கமலின் ‘ரிமோட்’ குறிப்பு யாரை நோக்கியது என்பது குறித்து அங்கிருந்தோரும், சமூக வலைதளங்களிலும் விவாதம் தீவிரமாகியுள்ளது.
