தனிக்கட்சி தொடங்குவதாக கூறியதாக பரவும் செய்திகள் தவறானது என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெளிவுபடுத்தியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று அவர் சென்னை மரினாவில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களின் உரிமைகளை காக்க ‘மீட்பு உரிமை கழகம்’ செயல்பட்டு வருவதாகவும், சமீபத்தில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது வெறும் மரியாதை நிமித்தமானது என்றும் கூறினார்.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை அமித் ஷாவிடம் விளக்கினதாகவும், அதிமுகவின் இரு பிரிவுகளும் மீண்டும் ஒன்றுசேர வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்றும் ஓபிஎஸ் வலியுறுத்தினார்.
டிசம்பர் 15க்குள் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முடிவு எடுக்கப்படாவிட்டால், அதே நாளில் முக்கிய அறிவிப்பு வெளியிடுவேன் என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் ஓபிஎஸ். சமீபத்தில் தனிக்கட்சி தொடங்கப் போகிறார் என கூறப்படும் தகவல்களை மறுத்த ஓபிஎஸ், “நான் தனிக்கட்சியைத் தொடங்குவதாக எப்போதுமே கூறவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில், பாஜகவில் இணைந்ததாக கூறப்படும் செங்கோட்டையனுடன் சமீபத்தில் எந்தவித உரையாடலும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு
டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு, ஓபிஎஸ் திடீரென எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டால், அவர் மீண்டும் அதிமுகவுக்குள் சேரும் வாய்ப்பு உருவாகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
