தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தேவயானி. காதல் கோட்டை, சூர்யவம்சம் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்த அவர், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். கவர்ச்சி கதாபாத்திரங்களை விட குடும்ப பாங்கான வேடங்களில் நடித்ததால், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
2001-ஆம் ஆண்டு நீ வருவாய் என திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜகுமாரனை தேவயானி திருமணம் செய்து கொண்டார். இவ்விருவருக்கும் இனியா, நினைதீ என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது அவர்களில் மூத்த மகள் இனியா கல்லூரியில் பயின்று வருகிறார்.
இதற்கிடையில், நீ வருவாய் என திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான திரைக்கதை பணிகளை இயக்குனர் ராஜகுமாரன் தொடங்கியிருப்பதாகவும், அதன்மூலம் தனது மகள் இனியாவை சினிமாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பண்ணைத் தோட்டம் வைத்து இயற்கை பொருட்களை உற்பத்தி செய்து, அதனை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் தொழிலை ராஜகுமாரன் தொடங்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்க நிகழ்வில் தனது பொருட்களை ஸ்டாலில் விற்பனை செய்தும் வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
“தமிழ் சினிமாவில் 40 வருடமாக இருந்து வந்தாலும், 40 லட்சம் கூட சம்பாதிக்கவில்லை. அந்தியூரில் இருந்து 40 வருடம் முன்பு சென்னை வந்தேன். பணம் சம்பாதிக்க பல வழிகள் இருந்தாலும், நான் இயற்கையான கலப்படமற்ற பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். இதை பொருளாதார நோக்கில் யோசிக்கவில்லை. என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது” என தெரிவித்தார்.