“கொள்கையை பின்பற்றக்கூடிய திராவிடக் கட்சியுடன் இணைந்துள்ளேன்” – மனோஜ் பாண்டியன் பேட்டி

சென்னை :
ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஆலங்குளம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ பி.எச். மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர், திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மனோஜ் பாண்டியன், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“இன்று திராவிடக் கொள்கையை பாதுகாக்கும் தலைவராக, எந்த சோதனை வந்தாலும் போராட்ட மனப்பாங்குடன் செயல்படக்கூடிய தலைவராக மு.க. ஸ்டாலினை பார்த்து சிந்தித்து எடுத்த தீர்மானமே திமுகவில் சேர்வதாகும்.”

அதிமுக தலைமையை குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

“தன்னுடைய குடும்பத்திற்காக அதிமுக கட்சியையே அடகு வைத்துள்ள கட்சியுடன் இல்லாமல், கொள்கைக்காக செயல்படும் கட்சியுடன் இன்று இணைந்துள்ளேன்,” என மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.

“வேறொரு இயக்கத்தின் கட்டளைக்கேட்பது போன்று அதிமுக தற்போது செயல்படுகிறது. உழைப்பை அங்கீகரிக்காத இடத்தில் தொண்டர்களின் அர்ப்பணிப்பு எதற்காக? என்ற கேள்வி எழுகிறது,” என வேதனை தெரிவித்தார்.

திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் மனோஜ் பாண்டியன் அறிவித்துள்ளார். “கொள்கையைப் பின்பற்றக்கூடிய திராவிடக் கட்சியுடன் நான் இணைந்துள்ளேன்,” என்று கூறினார்.

Exit mobile version