“கலைஞர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்..” : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கோவை மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த உலகத் தரச் செம்மொழி பூங்கா இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளாக காத்திருந்த இந்தத் திட்டம், தமிழ் மொழியின் செம்மொழி பெருமையை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பின்னணி

2010ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, கோவையில் ‘செம்மொழி பூங்கா’ அமைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் திட்டம் நிலுவையில் இருந்தது. பின்னர் 2021இல், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்காவை அமைப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, 2023ஆம் ஆண்டு 45 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்ட பணிக்காக ரூ.208 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பூங்காவின் சிறப்பம்சங்கள்

உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்தச் செம்மொழி பூங்காவில் மொத்தம் 23 வகையான தனித்தனி தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில்:

செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், மணம்கமிழ் தோட்டம், மூங்கில் தோட்டம், பசுமை வனம் அத்துடன் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், குங்குமம் மரம் போன்ற மரங்கள் நட்டுள்ளன. மேலும் 2,000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகளை கொண்ட ரோஜா தோட்டம் பூங்காவுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது.

கலாச்சார அம்சங்களும் இடம் பெற்றுள்ளன

பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், திறந்தவெளி அரங்கு, உணவகம், ஒப்பனை அறை, செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவுவாயில் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முதல்வரின் பதிவு

திறப்பு விழாவை ஒட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டது:
“தலைவரும் தந்தையுமான கலைஞர் அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி, குறித்த காலத்தில் கோவை செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.”

உலகத் தரத்தில், நகரின் முக்கியப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக வரவேற்று வருகின்றனர்.

Exit mobile version