“பொறுப்பிலிருந்து நீக்குவார்கள் என எதிர்பார்க்கல… அதிமுக ஒருங்கிணைப்பு பணி தொடரும்” – செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்பார்க்கவில்லை என்றும், தொண்டர்களின் எண்ணத்தை மட்டுமே பிரதிபலித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல்லில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அவரை அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கும் உத்தரவை பழனிசாமி வெளியிட்டார்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,
“அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். ஆனால் அதற்காக கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயக முறையில் என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். மனதில் தோன்றிய கருத்துகளைச் சொல்ல தொண்டனுக்கு உரிமை உண்டு. நமது பொதுச்செயலாளர் கூட பல்வேறு மேடைகளில் கருத்து தெரிவித்திருக்கிறார். நான் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றுதான் சொன்னேன். தேவைப்பட்டால் அது ஒரு மாதமாக இருந்தாலும் பரவாயில்லை. பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தாலும் தலைமை கவனிக்கவில்லை. நான் வெளிப்படுத்தியது எனது தனிப்பட்ட கருத்தே, அது கட்சியின் கருத்து அல்ல. அதைப் பற்றிப் பொதுச்செயலாளர்தான் சொல்ல வேண்டும்” என்றார்.

அதேவேளை, தன்னுடைய கருத்துக்கு பிரேமலதா, எச்.ராஜா, நைனார் நாகேந்திரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

செம்மலை உள்ளிட்டோர், செங்கோட்டையன் கட்சித் தலைமைக்குக் கெடு விதித்தது தவறு எனக் குறிப்பிட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “நான் தலைமைக்குக் கெடு விதித்தது தவறு என்று அவர் உடன் இருந்ததால் சொல்லியிருப்பார். நான் சொன்னது எனது கருத்து மட்டுமே, கட்சியின் கருத்து அல்ல. கட்சியிலிருந்து நீக்கியதற்கான காரணத்தைப் பொதுச்செயலாளர்தான் சொல்ல வேண்டும்” எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Exit mobile version