தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “எடப்பாடி பழனிசாமியை பற்றி நான் தவறாகப் பேசவில்லை” எனவும், “அவர் முதுகில் குத்திவிட்டதாக கூறினேன் என பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை” எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், “மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி தேமுதிகவினர் முதுகில் குத்திவிட்டார்” என அவர் பேசியதாக செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து, மேல்மருவத்தூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் வெளியிட்டார்.
அங்கு பேசிய அவர்,
“நான் சொல்லாதவற்றை நான் சொன்னதாக பரப்பப்படுவது கண்டனத்திற்குரியது. எங்கள் கட்சியின் உள்கட்டமைப்பு ஆலோசனைகளை எல்லாம் செய்தியாளர்களிடம் பகிர முடியாது. நான் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அப்படி எந்த கருத்தும் கூறவில்லை. தவறான செய்தி பரப்பிய ஊடகங்களை கண்டிக்கிறேன்” என்றார்.
மேலும், தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி, மக்களை தேடி மக்கள் தலைவர்’ என்ற மக்களுடன் நேரடியாக சந்திக்கும் பயணத்தைப் பற்றியும் அவர் பேசினார். முதல் கட்டப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், இரண்டாம் கட்டப் பயணம் செப்டம்பர் 5 முதல் 15 வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
“எங்கு சென்றாலும் மக்கள் மிகுந்த ஆதரவு அளிக்கிறார்கள். வருகிற ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும்” எனவும் அவர் கூறினார்.
மேலும், தமிழக சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசுதான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் தேமுதிக பொருளாளர் சதீஷ், தலைமைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.