சென்னை: பாமக தலைமைப் பதவியைச் சுற்றி தொடர்ந்துவரும் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “2026 ஆகஸ்ட் மாதம் வரை பாமக தலைவராக நான் தான் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். அதனால், மாம்பழம் சின்னமும் எங்களிடம் தான் உள்ளது” என்று அன்புமணி ராமதாஸ் தெளிவுபடுத்தினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பல மாதங்களாக தலைமை உரிமையைச் சுற்றி கடும் பிரச்சனை நீடித்து வந்தது. இதன் போது ராமதாஸ், “அன்புமணி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்கள் போலி” என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார். அதே சமயம், தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அங்கீகரிக்கும் நோட்டீஸை அனுப்பியது.
இந்த முடிவு எதிர்ப்புக்குள்ளானதால், வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் போது ராமதாஸ் தரப்பு, “நான் கட்சியின் நிறுவனர்; கோடிக்கணக்கான உறுப்பினர்கள் எனது தலைமையின் கீழ் உள்ளனர். அன்புமணி சமர்ப்பித்த ஆவணங்கள் நம்பகமானவை அல்ல” என்று வாதிட்டது.
மற்றுபுறம், அன்புமணி தரப்பு, “பொதுக்குழு தீர்மானத்தின்படி அவர் முன்பே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்; ஆணையம் அதை ஏற்றுக்கொண்டது” என்ற நிலைப்பாட்டை முன்வைத்தது.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தான் அன்புமணியை தலைவராக அறிவித்தோம். ஆவணங்களில் சந்தேகம் இருந்தால், சிவில் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று தெரிவித்தார். மேலும், இருதரப்பும் சமரசம் இல்லாமல் தொடர்ந்தால், கட்சியின் ‘மாம்பழம்’ சின்னம் கூட முடக்கப்படலாம் என்ற எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
வாதங்கள் முடிந்த நிலையில் நீதிமன்றம், “பாமக அங்கீகரிக்கப்படாத கட்சி; அதன் உள்துறை விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட இயலாது. தனிப்பட்ட உரிமை கோரும் தரப்பினர் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம்” எனக் கூறி வழக்கை முடித்துக்கொண்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “2026 ஆகஸ்ட் வரை பொதுக்குழு எனக்கு பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளது. அந்த ஆணையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, பாமக தலைவர் நான் தான்; மாம்பழச் சின்னமும் எங்களுடையதே” என தெளிவுபடுத்தினார்.
















