டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பு இல்லை : நயினார் நாகேந்திரன் விளக்கம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பல்ல என்று தமிழக பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
“தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியதற்கு நான் காரணம் என தினகரன் கூறியிருப்பதாக தெரிகிறது. ஆனால், அவர் ஏன் அப்படி கூறினார் என்பது எனக்குத் தெரியாது. கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகிய பின் அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது.

பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் மட்டுமே செயல்படுகிறது. திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த இயலும்.

லோக்சபா தேர்தலில் நாம் டிடிவி தினகரனுடன் கூட்டணியில் இருந்தோம். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அல்லது செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்களில் பாஜக தலையிடுவது இல்லை. தினகரனும், ஓபிஎஸ்சும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு கூறிக்கொள்வது அவர்களுக்குள் நடந்துகொள்வது.

நான் யாரிடமும் ஆணவமாக நடந்து கொள்ளவில்லை. அதிமுக ஒன்றுபடுவதே பாஜக விருப்பம். அமமுகவை ‘துக்கடா கட்சி’ என நான் நினைக்கவில்லை. மாறாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தொடர வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். டிடிவி தினகரனின் நிபந்தனை என்ன என்பதைத் தெரியவில்லை” என அவர் கூறினார்.

Exit mobile version