அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் “மனம் திறந்து பேசப் போகிறேன்” என்று அறிவித்துள்ளார்.
அதிமுகவில் நடைபெற்று வரும் உள்கிளர்ச்சி விவகாரங்களின் பின்னணியில், செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், கோவையில் நடந்த விவசாயிகள் பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்கள் இடம்பெறவில்லை என்று செங்கோட்டையன் குற்றம் சாட்டியிருந்தார். அதன் பின்னர் அவர் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்ததும், அதற்குப் பிறகு அதிமுக–பாஜக கூட்டணி அறிவிப்பு வெளியாகியதும் அரசியல் வட்டாரங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை அமர்வுகளிலும் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகச் சந்திக்காமல் தவிர்த்ததும், செய்தியாளர்களிடம் “எதிர்க்கட்சித் தலைவர்” என்றே குறிப்பிடத் தொடங்கியதும், அவர் மீது அதிருப்தி கொண்டிருப்பதை வெளிப்படுத்தியதாகக் கருதப்பட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பரப்புரைப் பயணங்களில் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்ததும் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதி திறந்த மனதுடன் பேசப் போவதாக செங்கோட்டையன் அறிவித்திருப்பது, அதிமுகவின் எதிர்கால நிலைப்பாட்டைச் சுற்றி பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. கட்சியில் தன்னிடம் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் இருந்து விலகியவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன.