மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி கிராமத்தில், குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டவர்த்தியைச் சேர்ந்த அஜய் (வயது 30), ஒரு கார் டிரைவராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி சுருதி (வயது 27), குளித்தலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 19ம் தேதி இரவு, தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் அஜய், சுருதியை கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த சுருதி, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, மறுநாள் அதிகாலை 5 மணியளவில் சுருதியை பார்க்க வந்த அஜய், திடீரென கத்தியால் பலமுறை குத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இக்கட்டான காயங்களால் சுருதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட குளித்தலை போலீசார், அஜயின் தந்தையான முன்னாள் டிஎஸ்பி ராமசாமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அஜயின் சகோதரர் அருண் சென்னையிலிருந்து வருவதாகவும், வந்தவுடன் அஜயை போலீசிடம் ஒப்படைக்கப்படுவார் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, ராமசாமி விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னையிலிருந்து அருணிடம் சென்று நீதிமன்றத்தில் சரண் அடைய திட்டமிட்டு குமாரமங்கலம் சாலையில் பஸ்சுக்காக காத்திருந்த அஜயை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version