உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான ராமேஸ்வரத்தில், பித்ருக்களுக்கு மோட்சம் அளிக்கும் மிக முக்கிய நாளான தை அமாவாசையை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக வருகை தந்த பக்தர்கள், கடலில் புனித நீராடித் தங்களது முன்னோர்களுக்கு எள் மற்றும் பிண்டம் வைத்துத் தர்ப்பணம் அளித்தனர். தட்சிணாயண காலத்தின் நிறைவுப் பகுதியான தை அமாவாசையில் ராமேஸ்வரத்தில் செய்யப்படும் தில ஹோமமும், தர்ப்பணமும் தலைமுறைகளைக் காக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
அக்னி தீர்த்தக் கரையில் சடங்குகளை முடித்த பக்தர்கள், பின்னர் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்திற்குள் உள்ள மகாலட்சுமி தீர்த்தம் தொடங்கி கோடி தீர்த்தம் வரையிலான 22 புண்ணிய தீர்த்தங்களிலும் புனித நீராடினர். இதற்காகக் கோயிலின் உட்பிரகாரங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாகப் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, சுவாமி மற்றும் அம்பாளைத் தரிசனம் செய்தனர். முன்னதாக, தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகளும் ஸ்படிக லிங்க தரிசனமும் நடைபெற்றன.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரடி மேற்பார்வையில், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (ADSP) தலைமையில் 840-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோயிலின் நான்கு ரத வீதிகள் மற்றும் அக்னி தீர்த்தக் கடற்கரை என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிகக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் நகருக்குள் தனியார் வாகனங்கள் நுழையக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் நகரின் நுழைவு வாயிலுக்கு வெளியே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பக்தர்களின் வசதிக்காக மதுரை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நகராட்சி நிர்வாகம் சார்பில் கடற்கரைப் பகுதியில் தற்காலிகக் கழிப்பறைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் ராமேஸ்வரம் தீவுப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
