ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் சட்டப்பேரவை கூடும்போது, மாநில ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அப்போது, மாநில அரசுகள் தயாரித்து அளிக்கும் அரசின் கொள்கை, நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை மாநில ஆளுநர் உரையாக வாசிப்பது மரபு.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக தமிழக ஆளுநரின் உரை சர்ச்சையாகி அவர் கூட்டத்தில் பேசாமல் வெளியேறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்தாண்டுக்கான சட்டபேரவை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.
இதில் உரை நிகழ்த்த வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்று இருக்கைக்கு அழைத்து சென்றார். அவை கூடியதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால், ஆளுநர் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது, ஆளும் திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்
இதையடுத்து, சபாநாயகர் குறுக்கிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே, பேரவையில் கருத்துத் தெரிவிக்கும் உரிமை உள்ளது. எனவே, ஆளுநர் மாற்றுக் கருத்தைத் தெரிவிக்காமல் உரை நிகழ்த்துமாறு கேட்டுக்கொண்டார். இதனால், அதிருப்தியடைந்த ஆளுநர் ரவி, தம்மைப் பேசவிடால் அவமதிப்புச் செய்வதாகக் கூறி, உரையை வாசிக்காமலேயே அவையில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து 4வது முறையாக பேரவையில் உரை நிகழ்த்தாமல் ஆளுநர் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
