த வெ க-வில் அடுத்து இணைபவர் யார்? – ஹின்ட் கொடுத்த விஜய்

ஈரோடு அருகே நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அத்திக்கடவு அவினாசி திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியாரிடம் இருந்து கொள்கையை எடுத்துக்கொண்டோம். அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறையை எடுத்துக் கொண்டோம். அவர்கள் இருவரும் தமிழகத்திற்கு சொந்தமானவர்கள் அவர்களது பெயரை பயன்படுத்தக்கூடாது என, யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் விஜய் தெரிவித்தார்.

தற்போதுள்ள ஆட்சியாளர்கள், பெரியாரின் கொள்கையை பின்பற்றுவதாக கூறிக் கொண்டு கொள்ளையடித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார். திமுகவும் பிரச்சினைகளும் பசை போட்டு ஒட்டியது போன்றது என குறிப்பிட்ட அவர், தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கூறியது போன்று, திமுக ஒரு தீய சக்தி என்றும் விஜய் ஆவேசமாக கூறினார்.
2026 தேர்தலில் களத்தில் இருக்கும் திமுகவுடன் தங்களுக்கு போட்டி. களத்திலே இல்லாதவர்களை பற்றி தான் பேச மாட்டேன் என்றும், அதிமுகவை மறைமுகமாக விஜய் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.கவில் சேர்ந்ததை போன்று, மேலும் பலர் தங்களுடன் வருவார்கள் என்றும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்படும் என்றும் விஜய் குறிப்பிட்டார்.

Exit mobile version