தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-வது ஆண்டு நினைவு தினம், குருபூஜை விழாவாக இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில், சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு, அமைதி பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்தின் தீவிர ரசிகர்களும், இதில் கலந்து கொண்டனர். அவர்கள் ஊர்வலமாக வந்து, விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

தேமுதிக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது, பிற கட்சிகளின் தலைவர்களும், விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து, மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோரும், விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக நிர்வாகிகள் விருகம்பாக்கம் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இது தவிர மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து மரியாதை செலுத்தினர்.