முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் இன்று சந்தித்து பேசினர். இதன் மூலம் கூட்டணி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக, செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், செல்வபெருந்தகை, ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய ஐவர் குழுவை, அக்கட்சி தலைமை நியமனம் செய்திருந்தது.
இந்த குழுவினர், திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை பெறுவது என்பது தொடர்பாக, மூத்த தலைவர்களுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.
பின்னர், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் ஐவர் குழு சந்தித்து பேசியது. அப்போது, 2026 தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை, முதலமைச்சரிடம் அவர்கள் வழங்கியதாக தெரிகிறது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தார். இதன் மூலம் கூட்டணி தொடர்பான சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும், திமுகவில் குழு அமைக்கப்பட்டவுடன், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
















