நடிகர் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்

நடிகர் ரஜினிகாந்த் இன்று 75-வது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில், அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டிருக்கும் பதிவில், ரஜினிகாந்தின் நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள், பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளதாக, குறிப்பிட்டுள்ளார்.
திரைப்பட உலகில், ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது, இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக, தாம் பிரார்த்தனை செய்வதாகவும், பிரதமர் கூறி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், ரஜினிகாந்த் மேடையில் ஏறினால், அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை கொண்டவர், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத, கள்ளம் கபடமற்ற நெஞ்சம் உள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆறிலிருந்து அறுபது வரைக்கும், அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் நண்பர் ரஜினிகாந்த்திற்கு, உள்ளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும், ரஜினிகாந்தின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறி இருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு, எக்ஸ் தளத்திலும் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்த் திரையுலகில் அசைக்க முடியாத பேராளுமையாக, 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ரஜினிகாந்திற்கு, இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல, தங்களின் ஸ்டைல் மேஜிக், ரசிகர்களை பல்லாண்டு காலம் மகிழ்விக்கட்டும் என்று, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், பாமக தலைவர் அன்புமணி, பிஜேபி முன்னாள் தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட பலர், நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version