திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற இந்து அமைப்புகள் போராட்டம் – போலீஸ் மண்டை உடைப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி ஏராளமான இந்து அமைப்புகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலரின் மண்டையும் உடைக்கப்பட்ட நிலையில் பதற்றம் காரணமாக திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்புடன் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை 6 மணிக்கு 180 அடி உயர திருப்பரங்குன்ற மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயில் மேடையில் பெரிய கொப்பரையில் 400 லிட்டர் நெய் மற்றும் 300 மீட்டர் காடாத் துணி மற்றும் 5 கிலோ கற்பூரத்தைக் கொண்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா, அகில பாரத இந்து மக்கள் சபை உள்ளிட்ட ஏராளமான இந்து அமைப்பினர் மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருப்பரங்குன்றத்தில் திரண்ட இந்துமுன்னணி, பி.ஜே.பி. உள்ளிட்ட ஏராளமான இந்து அமைப்பினர் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபம் ஏற்றுவதற்காக திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். ஆனால் தடுப்புகளை தகர்த்துவிட்டு போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Exit mobile version