அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் சாந்தி மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
அணுசக்தித் துறை தொடர்பான இதுவரை நடைமுறையில் இருந்த 1962-ம் ஆண்டு அணுசக்தி சட்டம், 2010-ம் ஆண்டு அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் ஆகிய பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிதாக சாந்தி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அணுசக்தி தொடர்பான அனைத்து விதிமுறைகளும் இப்போது இந்த ஒரே சட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
புதிய சட்டத்தின் கீழ், இதுவரை மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த அணுசக்தித் துறையில் இனி தனியார் நிறுவனங்களின் முதலீடுகளுக்கும் தொழில்நுட்ப பங்களிப்புக்கும் அனுமதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான உரிமம் பெற்று, தனியார் நிறுவனங்கள் அல்லது அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனங்கள், அணு மின் நிலையங்களை அமைத்து இயக்கவும், பராமரிக்கவும் முடியும். இதனால் நாட்டின் அணுமின் உற்பத்தித் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சில பிரிவுகள் தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதிய அணுசக்தி சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
