சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில், 6-வது நாளாக தொடர் போராட்டம் நடத்திய செவிலியர்களை, போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
பணி நிரந்தரம், சம வேலைக்கு, சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், கடந்த 18-ம் தேதி, சென்னை சிவானந்தா சாலையில், செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அனுமதித்த நேரத்தை தாண்டியும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், அவர்களை கைது செய்த போலீசார், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர். இரவு நேரத்திலும், பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அவர்களுடன் அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, மறுநாள் முதல், கூடுவாஞ்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று 6-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில், செவிலியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
