பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது – மோடி பெருமிதம்

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று ஜோர்டான் பயணத்தை முடித்துக் கொண்டு, எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா சென்றடைந்தார். விமான நிலையத்தில் எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி, பிரதமர் மோடியை வரவேற்றார்.

பின்னர் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் காபி திருவிழாவை அந்நாட்டு பிரதமருடன் பிரதமர் மோடி பார்வையிட்டு, காபியை அருந்தினார். இந்திய வம்சாவளியினரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் டாக்டர் அபி அகமதுவுடன், எத்தியோப்பியாவின் அருங்காட்சியத்திற்கு பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு, எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். விழாவில் பேசிய மோடி, 140 கோடி இந்தியர்களுக்கும் விருதை அர்ப்பணிப்பதாகக் கூறினார். இந்த தருணத்தில் எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலிக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி எந்தவொரு நாட்டிற்கும் அடித்தளமாகும். அறிவே விடுதலையைத் தரும் என்பதை இந்தியா எப்போதும் நம்புவதாகவும் மோடி கூறினார். இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவுகளில் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகித்ததாகவும், இந்தியாவில் இருந்து சென்றவர்கள் எத்தியோப்பியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் இப்போதும் பணியாற்றுவதாக பிரதமர் மோடி கூறினார்.

Exit mobile version